கர்நாடகா மாநிலத்தின் பெருவிழாவாக ஆண்டாண்டு காலமாக தசரா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்தாண்டு கோவிட்-19 தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கும் கடும் கட்டுப்பாடுகளுடன், மிக எளிமையாக நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி (யானை ஊர்வலம்), ஒவ்வொரு ஆண்டும் மைசூரு அரண்மனையிலிருந்து பன்னி மந்தபா வரை நடைபெறும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு வெறும் ஐந்நூறு மீட்டர் தூரமே நடத்தப்படும் என்றும் சாமுண்டி அம்மன் மலைக்கு வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தாண்டு நடைபெறும் விழாவை கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநில அரசின் சாதனைகள் குறித்து பரப்புரை செய்யும் விதமாகவும் நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.