கடல் மட்டத்திலிருந்து சுமார் இருபதாயிரம் அடி உயரத்திலுள்ள இந்த இடத்தில்தான் திங்கள்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பாதுகாப்புப் படை வீரர்களைப் பனிச் சரிவு தாக்கியது. ஆம் அது தான் சியாச்சின் மலைப்பகுதி.
புல் பூண்டுக் கூட முளைக்காத ஓர் இடமாக சியாச்சின் இருக்கலாம். ஆனால் அதுதான் நாட்டின் மிகப்பெரிய நன்னீர் இருப்புகளில் முக்கியமானது. சியாச்சினில் இருக்கும் குறைந்த அளவு பிராண வாயுவைக் கொண்ட இடமான பனா போஸ்ட், ராணுவ ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம் என்பதை ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்வார்கள்.
இதனால்தான், பாகிஸ்தான் படையிடமிருந்து இவ்விடத்தைக் காக்க, 1987ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பனா சிங், ஒரு சிறு குழுவுடன் இங்கு சென்று போர் நடத்தினார். அவரது நினைவாகவே இவ்விடம் 'பனா போஸ்ட்' என்ற பெயரைப் பெற்றது.
இதனாலேயே தான் கடந்த நவம்பர் 18ஆம் தேதி, பனிச்சரிவில் சிக்கிய பாதுகாப்புப் படை வீரர்களைக் காக்க ஒரு பெரும் குழுவையே கொண்டு, அவசரக்கால மீட்புப் பணி செயற்படுத்தப்பட்டது. பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள் மீட்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அங்கு நிலவும் கடும் குளிர் ( குளிர் காலத்தில் -50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை செல்லும் அபாயம்) காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்தது. சிங்கப்பூரிலிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவத் தளபதி பிபின் ராவத்திடம் இச்சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
இதேபோல 2016ஆம் ஆண்டு, சென்னை ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள், சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 33 வயதான லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் ஐந்து நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனாலும், அவரும் பின் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனிற்றி உயிரிழந்தார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், சியாச்சினில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
1984 முதல் 2018 வரையிலான 34 ஆண்டுகளில், போரைத் தவிர மற்ற காரணிகளால் மட்டுமே 869 இந்திய வீரர்கள் சியாச்சின் பகுதியில் உயிரிழந்துள்ளனர். சியாச்சின் வரலாற்றிலேயே 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 7 மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அன்று ஏற்பட்ட ஒரு பெரும் பனிச்சரிவில் 135 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த முப்பது ஆண்டுகளாக இமய மலையில் ஏற்படும் பனிச்சரிவு அதிகரித்துள்ளது. உலக வெப்ப மயமாதலே இதற்கு முக்கியக் காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர். வெப்ப நிலை அதிகரிப்பதால் மிக எளிதில் பனி விரிசலடைவதாகவும், இது பனிச்சரிவுகளுக்கு வழிவகுப்பதாகவும் அறிஞர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த நான்கு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் புதன்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது. உயிரிழந்தவர்களில் மூவர் பஞ்சாப் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் டோக்ரா ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு - டைட்டானிக் ஹீரோ கவலை!