இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், "நிதிஷ்குமார் தனது 15 ஆண்டுகள ஆட்சியில் மாநிலத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்களை அழித்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்கிறார். இரண்டு தலைமுறைகளின் எதிர்காலத்தையும் அவர் பாழ்படுத்திவிட்டார். வேலையின்மை, வேலைவாய்ப்புத் தொழில்கள், முதலீடு மற்றும் இடம்பெயர்வு குறித்து அவர் எதுவும் பேசாததற்கு இதுவே காரணம். இந்த விஷயங்களில் ஏன் அவர் பேசாமல் இருக்கிறார்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் பாணியை பின்பற்றி, முதலமைச்சர் நிதிஷ் குமார் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார் என்று விமர்சித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் , மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் மக்களை பாதிக்கும் ஊழல் போன்ற உண்மையான பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் பேச மாட்டார் என தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைகளை வழங்குவது, வறுமையை ஒழிப்பது, தொழிற்சாலைகள் திறப்பது மற்றும் உணவு பதப்படுத்தும் பிரிவுகளை உருவாக்குவதே ஆர்ஜேடியின் ஒரே கவனம் என்றும் அவர் கூறினார். பிகார் மக்கள் மாநிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற பிகார் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 71 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 55.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக விழுக்காடு ஆகும்.