இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியாவை மத்திய அரசு நியமித்தது. அவர் 30ஆம் தேதி விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது இந்திய விமானப்படை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகிறது. பாகிஸ்தான் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டதிலிருந்து அதிகளவிலான போராட்டங்களை இந்தியா சந்தித்துவருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.எஸ். பதாரியா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விமானப்படையின் சாதனைகள் குறித்து உரையாற்றினார். பாலகோட் பயங்கரவாத முகாம்களை தகர்த்தது உள்பட விமானப்படை செய்த ஏராளமான சாதனைகள் பற்றி அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வானில் பறந்த இந்திய விமானப்படையின் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டரை, இந்திய விமானப் படையினரே சுட்டு வீழ்த்தியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பதாரியா, பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் எனத் தவறாக நினைத்து விமானப்படை அலுவலர்கள் சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என்றும், இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த இரண்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், பாலகோட் தாக்குதல் தொடர்பான காணொலிக் காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.