ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கஞ்சா கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டிலிருந்த 20 சென்டிமீட்டர் அளவு கொண்ட கத்தியை எடுத்து முழுங்கியுள்ளான். சில நாள்களாக சாதாரணமாக சென்ற இளைஞரின் வாழ்க்கையில் திடீரென பசியின்மை, அடிவயிற்றில் கடுமையான வலி போன்ற பல பிரச்னைகள் வரத் தொடங்கியதையடுத்து குடும்பத்தினர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரேவில் வயிற்றில் கத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். கத்தி மிகவும் ஆபத்தான இடத்தில் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இளைஞரை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டார் குழுவினர், இளைஞரைக் காப்பாற்றும் முயற்சியில் திவீரமாக ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாகப் போராடி அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் டார் கூறுகையில், " இதே போல் பல இக்கட்டான சூழ்நிலைகளை எளிதாக கையாண்டுள்ளோம். ஆனால், இந்த இளைஞரின் வயிற்றில் கத்தி இருந்த இடம் பெரும் சவாலாக இருந்தது. அறுவை சிகிச்சையில் சிறிய தவறு ஏற்பட்டாலும் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முதலில் ரேடியோலஜிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உட்புற காயங்கள் சரிசெய்யப்பட்டன. பின்னர், மனநல மருத்துவர் மூலம் மருந்துகள் அளித்து அறுவை சிகிச்சைக்கு மனநிலையை சரிசெய்தோம். அதன் பின்னரே, மூன்று மணி நேரம் சிகிச்சையளித்து கத்தியை அகற்றினோம். தற்போது, இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளது" எனத் தெரிவித்தார்.