நாட்டின் மத சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தனது ஆட்சேபனைகள் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக வெளியான சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிவசேனா, மத நம்பிக்கையைத் தவிர, ஷாஹீன் பாக், குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசியப் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு போன்ற பிரச்னைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தாள்களான சாம்னா, தோபஹர் கா சாம்னா ஆகியவற்றில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த நாடு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. சுதந்திரம் அல்லது கௌரவம் தொடர்பான விஷயங்களில், வெளிநாட்டவர்களிடமிருந்து எந்தப் பாடங்களும் தேவையில்லை.
அமெரிக்க அதிபர் அகமதாபாத், டெல்லி, ஆக்ராவின் 'கண்காட்சிச் சுற்றுப்பயணங்களை' முடித்து கொண்டு மூட்டை கட்டட்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி-ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், டிரம்ப் அடிப்படையில் 'ஒரு வணிக பயணத்தில்' இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்.
ஆனால் சமீபத்தில், ட்ரம்பின் பயணத்திற்குச் சற்று முன்னர், இந்திய தொழிலதிபருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதம் 'வளரும் நாடுகளின்' பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா அகற்றியது. ட்ரம்பின் இந்தியளவிலான 36 மணி நேர பயணம், வளர்ந்து வரும் வேலையின்மை, இந்தியாவில் இருக்கும் நிதி நெருக்கடி போன்ற பெரிய பிரச்னைகளைத் தீர்க்க உதவாது என்றும், அவர் புறப்பட்டவுடன் அவரது வருகையின் அனைத்து தடயங்களும் அழிக்கப்படும் என்றும் அது சுட்டிக்காட்டியது.
தனது வருகைக்கு முன்னர், இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய வருவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அவரது 36 மணி நேர குறுகிய பயணம் நடுத்தர வர்க்கங்களுக்கும், இந்தியாவின் ஏழைகளுக்கும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டிருந்த சிவசேனா, கல்வித் துறையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சாதனைகளைப் பார்க்கச் செல்லும் டிரம்ப், மோடியின் செயல்களை எப்போது மதிப்பாய்வு செய்வார் என்று ஆச்சரியப்படுங்கள்" என்றும் தனது நாளிதழ்களில் சிவசேனா கிண்டல் செய்யும் விதமாக கருத்துகளை வெளியிட்டிருந்தது.
டிரம்ப் அகமதாபாத் வரும் முன்னர், அங்குள்ள சாலைகள் சுத்தம் செய்யப்பட்டும், ஏழை மக்களின் குடியிருப்புகள் தெரியாதவாறு சுவர் எழுப்பி மறைக்கப்பட்டன. இதுபோன்ற 'கண்ணாமூச்சி வினோதங்கள்' டிரம்ப் பயணத்தின்போது எல்லாவற்றையும் விட அதிக கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் சிவசேனா கருத்து தெரிவித்திருந்தது.
இதையும் பார்க்க: ‘அருமையான வரவேற்புக்கு நன்றி’ - மோடியை பாராட்டிய ட்ரம்ப்