அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 105 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முதலமைச்சர் பதவி காரணமாகக் கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனாவுடன் உறவு முறிந்தது.
தன்னிடம் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்த நிலையில், இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.
யாரும் எதிர்பாரதவிதமாக எதிர் துருவத்தில் இருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் உதவியை நாடிய சிவசேனா, அவர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறியது.
இந்நிலையில் கூட்டணி முடிவு குறித்து பேச சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இதையடுத்து, மகாராஷ்டிரா ராஜ்பவனில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தக்கரே சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆட்சியமைக்க ஆளுநரிடம் விருப்பம் தெரிவித்து கூடுதல் நேரம் கேட்டுள்ளோம். ஆட்சியமைக்க மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் ஆளுநரிடம் கூடுதல் நேரம் கேட்டுள்ளோம். கூடுதல் நேரமளிக்க ஆளுநர் மறுத்துள்ள நிலையில், சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் உறுதியான நேர்மையான ஆட்சியமைக்க அனைத்து முயற்சியும் எடுத்துவருகிறோம்' என்றார்.
உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராகப் பதவியேற்கக் கோரி தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளதாகவும், அக்கட்சிக்குத் துணை முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் நிலைப்பாட்டைக் காங்கிரஸ் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் உறுதி தெரிவிக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்துவருகிறது.
இதையும் படிங்க: கடும் நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்