மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெறவிருக்கிறது.
இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சியதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்ரேவிற்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சியிலுள்ள சில எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்விரு கோரிக்கைளையும் பாஜக ஏற்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஆதித்ய தாக்ரேவிடம் தொலைபேசியில் பேசிய அமித்ஷா, அமைச்சரவை குறித்து தீபாவளிக்குப் பின்னர் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார் கிரண் திவாரி!