அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவ சேனா கட்சி தனித்துப் போட்டியிட்டது. போட்டியிட்ட பல தொகுதிகளில் சிவ சேனா தனது கட்டுத் தொகையை இழந்ததாக அறிய முடிகிறது.
இந்நிலையில், இந்த தேர்தல் முடிவை முன்னிறுத்தி, மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் சிவ சேனா கட்சியை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று ஊடகங்களைச் சந்தித்துப்பேசிய அவர்,
"மகாராஷ்டிராவை ஆளும் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியின் தலைமை வகிக்கும் கட்சியான சிவ சேனா அதன் தலைவர் உத்தவ் தாக்கரேயின் தவறான வழிகாட்டலால் பிகாரில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியானது, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு எதிராக களமாடியது. அங்கே கூட்டணி உறவு சுக்குநூறாக உடைந்துவிட்டது.
சிவ சேனா என்பது இப்போது சவ சேனாவாக மாறிவிட்டது. அதாவது சிவ படை, இறந்த சடலமாக மாறிவிட்டது.
மகாராஷ்டிராவில் எம்.வி.ஏ அரசிற்கு தலைமை தாங்கும் சிவ சேனா, தனது சொந்த பெயரில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்" என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சிவ சேனாவின் செய்தித் தொடர்பாளரும், சட்டப்பேரவையின் துணைத் தலைவருமான நீலம் கோர்ஹே, "உங்கள் பெயரில் உள்ள அ என்ற எழுத்தை எடுத்துவிட்டால், ம்ருதா என வரும்.மராத்தியில் இறந்துவிட்ட என்ற பொருள் வரும். உங்கள் பெயரில் வரும் அ என சொல்லின் முக்கியத்துவத்தை அம்ருதாஜி நீங்கள் முதலில் உணருங்கள்.
தீபாவளியின் புனித விழா காலக்கட்டத்தில் உங்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை வெளியே கூறி மக்களின் முகத்தை சுழிக்க வைக்க வேண்டாம்.
சிவசேனா பெயரை இவ்வாறு அழைப்பதன் மூலம் நீங்கள் பயனடைய மாட்டீர்கள்" என கூறினார்.
பிகாரில் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் பணியாற்றியது என்பது கவனிக்கத்தக்கது.