மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாஜக 105, சிவசேனா 56 என இந்தக் கூட்டணி 161 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகள் வென்றன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியது.
ஆட்சி அதிகாரத்தில் சரி பாதி வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தினை மக்களவைத் தேர்தலின்போதே வகுத்துவிட்டோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். முக்கியமாக, உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரேவிற்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என அக்கட்சி சார்பில் கேட்கப்படுவதாகத் தகவல் வெளியாகின. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சிவசேனாவை ஆதரிக்கலாம் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சிவசேனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அவர்களிடமிருந்து அழைப்பு வந்தால் எங்கள் மேலிடத்தை தொடர்புகொண்டு முடிவு எடுப்போம்" என்றார்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சியில் அமர்ந்து சிறப்பான பணியை ஆற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார். இதனால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது.
இதையும் படிங்க: குஜராத் முன்னாள் முதலமைச்சர் திலிப் பாரிக் காலமானார்