மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னரும் கூட அங்கு அரசியல் குழப்பம் தீர்ந்தபாடில்லை. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக நடப்பவைகளை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேவுடன் சேர்ந்து தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் வைத்து நேற்று நள்ளிரவு திடீரென்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, மருமகன் அஜித் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியில் வந்த உத்தவ் தாக்கரே முகத்தில் புன்னகையுடனும், சஞ்சய் ராவத் செய்தியாளர்களைப் பார்த்து தனது கட்டை விரலை நீட்டி, வெற்றிச் சின்னத்தை காண்பித்தும் அங்கிருந்து விடைபெற்றனர்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சஞ்சய் ராவத், ’’ மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதலமைச்சராக இருப்பார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்கும்” என்று மகிழ்வுடன் கூறினார்.
இதையும் படிங்க: பவார் - தாக்கரே திடீர் நள்ளிரவு சந்திப்பு - நடந்தது என்ன? யாருக்கு எந்தெந்த துறைகள்?