பதவி உயர்வில் பட்டியலின சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முழு உரிமை, மாநில அரசுகளுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி இயக்கம், நேற்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் ஆகியப் பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு மஜ்லிஸ்-இ-உலாமெ-இ-ஹிந்த் என்ற ஷியா (இஸ்லாமியப் பிரிவு) அமைப்பு ஆதரவு தெரிவித்ததாகத் தகவல் எழுந்தது.
இதனிடையே இப்போராட்டத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அந்த அமைப்பின் தலைவரும், மதகுருவுமான மௌலானா கால்பே ஜாவத் நக்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், "பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற பாரத் பந்த்துக்கும் (நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்) தலைவர் மௌலானா கால்பேவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்கு அவர் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க : 'சாவர்க்கரின் வரலாறை மாணவர்கள் கற்றுக்கொள்ள அவசியமில்லை'