ஹைதராபாத்: ஒவ்வொரு மனிதனும் தனது பணி ஓய்வுக்கு பின்னர் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான். தனது பொழுதுபோக்கு கலந்த வாழ்க்கையை மறுவரையறை செய்கிறான். ஆனால் ஷேக் நஸீர் பாஷா தனது வாழ்க்கையை மனித குலத்துக்கு அர்ப்பணித்துள்ளார். மதங்களை கடந்து சகோதரத்துவம் பேண எண்ணுகிறார். பழங்களை உண்டு விதைகளை தூவும் வௌவால்கள் போல் மனித நேயத்தை பரப்புகிறார்.
இதர இஸ்லாமியர்களை போல் ஐந்து முறை தொழுகை நடத்தும் பாஷா, பகவத் கீதையையும் சமமாக பாவிக்கிறார். தனது சொந்தக் கட்டடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதியவர்கள், இளைஞர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கிறார். நெல்லூர் மாவட்டம் முலபேட்டியில் வசிக்கும் ஷேக் நஸீர் பாஷா, வங்கி ஊழியராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்.
நலகொண்டாவை சேர்ந்த பிக்ஷமய் குருஜியிடம் முறைப்படி யோகா மற்றும் பகவத் கீதையை கற்றுக்கொண்டார். தான் கற்ற கல்வியுடன் தற்போது சமத்துவம் மற்றும் மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறார். யோகா கலையையும், பகவத் கீதை செய்தியையும் கிராமங்கள் அறிய செய்கிறார். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் பாஷா, பகவத் கீதை ஒரு அறிவுப் பெட்டகம் என்றும் கூறுகிறார்.
பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களை இவர் அறிந்துள்ளார். இதனை கிராம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். 2004ஆம் ஆண்டு முதல் யோகா கற்பிக்கும் ஷேக் நஸீர் பாஷா, 2018ஆம் ஆண்டு பகவத் கீதை பள்ளியொன்றையும் தொடங்கியுள்ளார். யோகா மட்டுமின்றி தியானத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த ஈஷா யோகா மையத்திற்கு அனுமதி!