டெல்லியில் கடந்த திங்களன்று குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதில் காவல் துறையினர் உட்பட, 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் தலைநகரில் நிகழ்ந்துள்ள இத்தகைய வன்முறை சம்பவத்தைத் தடுக்க காவல் துறை தவறிவிட்டதாக பல்வேறு தரப்பினர் கடும் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். டெல்லி காவல்துறை கட்டுப்பாடு மத்திய உள்துறையின் கீழ் உள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் முன்னாள் கூட்டாளியும், மகாராஷ்டிராவை தற்போது ஆட்சி செய்யும் சிவசேனா கட்சியும் அமித் ஷாவை கடுமையாகச் சீண்டியுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் உள்துறை அமைச்சகத்தையும் மத்திய அரசையும் கடுமையாகச் சாடியுள்ளது.
'தேர்தல் நேரத்தில் டெல்லியில் வீடுவீடாகச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா. தற்போது வெளியவர மறுப்பது ஏன்?. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற சம்பவம் அரங்கேறியிருந்தால் பாஜக உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க குஜராத்தில் அமித் ஷா இருந்த போது இந்திய உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பினால், தேசவிரோதிகள் எனக்கூறுவீர்களா?' என அடுக்கடுக்கான கேள்விகளை சாம்னா எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு