அமெரிக்க அதிபரின் இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக நாளை (24 ஆம் தேதி) இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி குஜராத், டெல்லி என நாட்டின் முக்கியமான இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ட்ரம்பின் அகமதாபாத் பயணத்தைக் கருத்தில்கொண்டு, மத்திய உள் துறை அமைச்சர் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார். இந்தியாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபரின் பயணத்தின் இறுதி முன்னேற்பாடுகளை மறு ஆய்வுசெய்த அவர், இந்தியத் தரப்பின் சார்பில் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அலுவலர்களும், டெல்லியிலிருந்து வருகைதந்துள்ள தேசியப் பாதுகாப்புக் குழுவினரும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளனர். கடலோரப் பகுதிகள் முழுவதிலும் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சாலை மார்க்கமாகவும் பயணம்செய்வதால் அவர் செல்லும் சாலைகளில் வழிநெடுக காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள். அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலர்களும், தேசியப் பாதுகாப்புக் குழுவினரும் தங்களது கண்காணிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : துப்பாக்கியால் தவறுதலாகத் தலையில் சுட்டுக்கொண்ட காவலர்...!