தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழக்கும் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடந்தது. அப்போது, மக்களவை உறுப்பினர்கள் இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது, முன்னாள் ஹைதராபாத் காவல்துறை ஆணையரை அரசியல்வாதி ஒருவர் மிரட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி, அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அவையில் சமர்பிக்குமாறு வலியுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அமித் ஷா, தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஓவைசியை நோக்கி கையை உயர்த்தி, "எதிர்க்கட்சி உறுப்பினர்களை எவ்வாறு முதல்வரிசை உறுப்பினர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்களோ, அதையே எதிர்தர்ப்பினரிடமிருந்தும் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். மற்றவர்கள் பேசும்போது எதிர்க்கட்சியினர் பொறுமை காக்க வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்தார்.
இதற்கு ஓவைசி, "என்னை நோக்கி கை காட்டி பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் நான் அச்சப்பட மாட்டேன்" என்று கண்டித்தார். பதிலுக்கு அமித் ஷாவோ, "நான் யாரையும் அச்சுறுத்தவில்லை. உங்கள் மனதில் அச்சம் இருந்தால் நான் என்ன செய்வது" என வாக்குவாதத்தை முடித்துவைத்தார். இதனால், மக்களவையில் சிறிய நேரம் பரபரப்பு நிலவியது.