திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமையன்று, பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் கர்ஜி-பிலோனியா இடையேயான ரயில் தடத்தை மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, திரிபுரா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, மாநில முதல்வர் பிப்லப் தேவ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேடைக்கு இடது புறமாக இவர்கள் அனைவரும் இருந்த நிலையில், அவர்களுக்கு நேர் எதிராக திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ், சமூகநலத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் அமைச்சரும், பழங்குடியின இளம் தலைவருமான சாந்தனா சக்மா ஆகியோர் நின்றிருந்தனர்.
அப்போது, அந்த பெண் அமைச்சரின் இடுப்பில் மனோஜ் காந்தி தேவ் கை வைத்தது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் அந்த அமைச்சரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சியான இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அமைச்சர் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், எதிர்க்கட்சியினர் கீழ் தரமான அரசியலில் ஈடுபடுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.