தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின்படி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வியை போதிக்க திட்டவரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் ஆண்
பெண் சமத்துவம் ஏற்படும் என்பது கல்வியாளர்களின் கருத்து . பாலியல் கல்வியின் மூலம்தான் பாலியல் அத்துமீறல் என்றால் என்ன, பெண்களை மதிப்பது எப்படி, பெண்கள் தற்காப்பு,
குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
இந்நிலையில் , புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரையின்படி பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை என்றும்,பாலுறவு என்ற வார்த்தையே தவறு என்றும்; அதை பள்ளிகளில் பயன்படுத்துவதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் '' சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ்'' அமைப்பின் செயலர் 'அதுல் கோத்தாரி' தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பள்ளிகளில் பாலியல் கல்வியை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? அது தேவையில்லாத பரிந்துரை . ஏனெனில் இதுவரை பாலியல் கல்வி எங்கெல்லாம் அமல்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அது எதிர்வினையையே ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு மனித உடல் அமைப்பு பற்றி தெரிந்தால் போதுமானது. அதற்குதான் அறிவியல் பாடம் இருக்கிறதே. இந்நிலையில்,பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை. கல்வியில் இந்தியத் தன்மை இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.