ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பருமான ரகுவன்ஷ் பிரதாப் சிங்(74) கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், மூச்சுத் திணறல் காரணமாக இன்று (செப்டம்பர் 13) உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக பாட்னாவிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
லாலு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்ற பிறகு, அவரது மகன் கட்டுப்பாட்டில் கட்சி வந்துள்ளது. தற்போது அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என பலரும் வருத்தம் தெரிவித்துவரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு ரகுவன்ஷ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.