டெல்லியில் கிருஷ்ணன் கோஷ்லா(91), அவரது மனைவி சரோஜ் கோஷ்லா ஆகியோர் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முதியவர்களுக்கு உதவியாக கிஷன் என்பவரை வேலைக்கு சேர்த்தனர். கிஷன் ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணன் அவ்வப்போது வேலை சொல்வது கிஷனுக்கு பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து கிருஷ்ணன் மீது கோபம் கொண்ட கிஷன், திடீரென்று ஒரு நாள் ஐந்து பேருடன் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சரோஜ் கோஷ்லாவை அடித்து சுயநினைவை இழக்க செய்துவிட்டு கிருஷ்ணனை கடத்திச் சென்றுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணனை கிஷன் கடத்திச் சென்றுள்ளார் என்று சரோஜ் கோஷ்லா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கிஷனை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே கிஷனை கைது செய்து விசாரணை செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையில், "கிருஷ்ணனை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து கடத்திச் சென்றதாகவும். பின்னர் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்து, சங்கம் விகார் பகுதியில் குழியில் புதைத்து விட்டதாகவும்" தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கிருஷ்ணனின் உடலை காவல்துறையினர் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, கிஷனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.