கடந்த வெள்ளிக்கிழமை, கும்லா துணை ஆணையர் சஷி ரஞ்சன், தனது அலுவல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது தங்களது சேமிப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு, தந்தை ஷங்கர் மிஸ்ராவுடன் வருகை தந்த ஸ்ரேயன்ஷி (5 வயது) பிரியான்ஷி (8 வயது) என்ற இரண்டு சிறுமிகள் மாவட்ட ஆணையரைச் சந்தித்து ”தயவுசெய்து எங்கள் சேமிப்புப் பணத்தை பிரதமர் மாமாவுக்கு அனுப்புங்கள்" என்று கோரிக்கை வைத்தனர்.
மொத்தம் 2,440 ரூபாயை நன்கொடையாக அளித்த இரு சிறுமிகளும் கரோனா தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்காக, இந்தப் பணத்தை சேமித்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அம்மாவட்ட ஆணையர், இந்த இரண்டு குழந்தைகள் குறித்தும் தான் பெருமை கொள்வதாகவும், இவர்களின் இந்த முயற்சியை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள தனது குழந்தைகளின் இந்த செயல் குறித்துப் பேசிய மிஸ்ரா, இந்த நெருக்கடியின்போது பணத்தை நன்கொடையாக வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் பேசியதைக் கண்டதும், தங்கள் சேமிப்புப் பணத்தை பிரதமர் மாமாவிடம் கொடுக்க விரும்புவதாகக் குழந்தைகள் தெரிவித்ததால் அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில் அழைத்து வந்ததாக கூறினார்.
சிறுமிகள் மாவட்ட துணை ஆணையரிடம் பணத்தை ஒப்படைத்தபோது உடனிருந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி மணீஷ்குமார், இது பெருமைமிக்க தருணம் என்றும் குழந்தைகளின் இந்த முன்முயற்சி தனக்கு பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’தொடத் தேவையில்லை' - சென்சாரில் இயங்கும் கிருமிநாசினி தெளிப்பான்