சீக்கிய மத குரு தேக் பகதூரின் நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரகப்கஞ்ச் குருத்வாராவில் டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடி வணக்கம் செலுத்தினார்.
இதனை விமர்சித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னாவில், தலையங்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “சீக்கிய மத குரு தேக் பகதூரின் நினைவுநாள், அவர் தகனம் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள ரகப்கஞ்ச் குருத்வாராவில் டிசம்பர் 19ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. சீக்கியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மோடி அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 ஆம் தேதி முதல் அதே டெல்லியில் தான் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குருத்வாராவை மோடி அடைந்தபோதும் பஞ்சாப் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. சீக்கிய விவசாயிகளின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.
குரு தேக் பகதூருக்கு, பிரதமர் மோடி வணக்கம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எந்த உத்வேகத்தை குரு தேக் பகதூரிடமிருந்து பெற்றாரோ அதே உத்வேகத்தைப் பெற்றே டெல்லி எல்லைக்கு அருகே ஆயிரக்கணக்கான சீக்கிய போராளிகளும் போராடி வருகிறார்கள்.
பிரதமர் குருத்வாராவை அடைந்தபோது 'குர்பானி' இசைக்கப்பட்டது. ஒருவர் தனது எண்ணங்களை மாற்றாவிட்டால், கடவுள் மீதான சேவைகளும் பக்தியும் பயனளிக்காது என்று குர்பானி கூறுகிறது. ஒருவர் புனிதமான மத புத்தகத்தை பலமுறை படித்தாலும், அதன் போதனைகள் ஏற்கவில்லை என்றால் அதனால் பயனேதும் இருக்காது என்றும் குர்பானி கூறுகிறது.
மோடியின் அரசியல் எதிரிகள் அவர் செய்யும் எந்தவொரு காரியத்திற்கும் அவரை விமர்சிப்பது சரியில்லை என்றாலும், திடீரென குருத்வாராவைப் பார்வையிட்டது தொடர்பாக எழும் விமர்சனங்களை எளிதாக புறம்தள்ள முடியாது. பிரதமர் மோடி சீக்கியர்களை நேசிப்பது உண்மையென்றால் பஞ்சாப் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தீர்வுக்கு வழியின்றி கடுங்குளிரிலும், பனியிலும் போராட வேண்டிய அவசியமில்லை. அவர் உண்மையில் சீக்கியர்களை நேசிக்கிறாரா ? என்பது விரைவில் தெரியும்” என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் - தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா