கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியுடன் சண்டைப் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன அவர் ரயில் முன்பாயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்துள்ளார்.
யாரும் இல்லாத நேரத்தில் வந்த அவர், தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். பின்னர் தன்னை அப்படியே செல்ஃபி எடுத்துக் கொண்டு, 'வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது நண்பர்களே போதும் வாழந்தது, அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்' என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியாக நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் நண்பரைக் காப்பாற்ற உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள், அவர் எங்கு படுத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி, இளைஞர் அனுப்பிய செல்ஃபியை பல குரூப்களுக்கு அனுப்பியுள்ளனர். இறுதியில் அந்த செல்ஃபி போட்டோவின் பின்புறத்தில் 82 என்ற மைல் கல் எண் இடம்பெற்றிருந்தது. அதை வைத்து அவரது நண்பர்கள் அந்த இளைஞரைக் காப்பாற்றியுள்ளனர். அதாவது 82 மைல் கல் என்பது சங்கனாச்சேரி ரயில் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. அதை வைத்து இளைஞர் இருந்த இடத்தை எளிதில் அடைந்துள்ளனர்.
செல்ஃபியால் பல உயிர்கள் பறிபோகியுள்ள நிலையில், ஒரு செல்ஃபி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.