கர்நாடகா மாநிலம் தேவங்கிரி மாவட்டத்திலுள்ள துங்கா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வராக பர்வதம் என்னும் மலையில் தொடங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்துசெல்லும் துங்கா ஆறு கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்திலிருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப்படுகிறது.
’துங்கபத்ரா’ ஆற்றில் சுற்றுலாப் பயணிகளும் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் புகைப்படம் எடுப்பதும் ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்வதும் வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல அவ்வழியே சென்ற ஒருவர் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டு செல்ஃபி எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியுள்ளார்.
பின்னர் செல்ஃபிக்காக தனது மொபைல்ஃபோனை பார்த்தபோது, அவருக்குப் பின்புறம் முதியவர் ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் பிம்பம் தெரிந்தது.
இதனையடுத்து, விரைந்துசெயல்பட்ட இளைஞர் பொதுமக்கள் உதவியுடன் தற்கொலை செய்ய முயற்சி செய்த முதியவரைக் காப்பாற்றினார். இந்தச் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.