ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். இதுபோன்ற மோதல் சம்பவங்களின்போது இந்திய ராணுவ வீரர்களால், பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவார்கள். இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையிலான லாக்டவுன் காலத்தில் மட்டும் பயங்கரவாதிகள் 68 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாத லாக்டவுன் நேரத்தில் மட்டும் 25 ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்திய பாதுகாப்புப் படை மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால், 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, இந்திய ராணுவத்தின் கூட்டு முயற்சியால் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 10ஆம் தேதிவரை, அதிகபட்சமாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 35 பேர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நான்கு பேர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் 10 பேர், லஷ்கர்-இ-தாலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 16 பேர், மூன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் தரவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் 2019ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிவரை இந்திய பாதுகாப்புப் படை வீரர்களால், 123 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கால் உப்புக்கஞ்சி குடிக்கும் காஷ்மீர் நாடோடி சமூக மக்கள்!