வங்கிகளிலிருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என அறிவித்தது. தற்போது இங்கிலாந்தில் உள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அது குறித்த தகவல் எதுவும் தனக்கு அளிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் லலித், அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு, மல்லையாவை அழைத்துவர எம்மாதிரியான ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மல்லையா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.
மல்லையா தரப்பு வழக்கறிஞர் அங்கூர் சைகள், ரகசிய நடவடிக்கை குறித்த விவரங்கள் தனக்கும் தெரியாது எனத் தெரிவித்தார். நாடு கடத்துவதை ரத்து செய்யக் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அங்கூர் தெரிவித்தார்.
நடவடிக்கை குறித்த விவரங்களை நவம்பர் 2 ஆம் தேதிக்கு முன்பாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.