பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் ஏர் இந்தியா ஒன் போயிங் பி -747 ரக விமானத்திலேயே பயணம் செய்துவருகின்றனர். இந்தியாவில் விவிஐபி-களுக்காக மட்டுமே இந்த போயிங் 747 விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் வரிசையில், இப்போது போயிங் பி -777 விமானம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது. அண்மையில், முதல் போயிங் பி -777 விமானம் டெல்லி வந்தடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது போயிங் பி -777 விமானம் நேற்று (அக்டோபர் 24) டெல்லி விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த இரு விமானங்களிலும் பாதுகாப்பு அறைகள் மற்றும் பிற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அதில், கான்ஃபரன்ஸ் அறைகள், இணைய வசதி, மருத்துவ அவசரத்துக்கான பிரிவு இடம்பெற்றுள்ளன. அவசர நேரத்தில் நடுவானிலேயே இதற்கு எரிபொருள் நிரப்ப முடியும். நடுவானில் பயணத்தில் இருக்கும்போது, விமான தாக்குதல் ஏற்பட்டால் பி -777 விமானம் எதிர்த்தாக்குதலை மேற்கொள்ளும்.
ஏர் இந்தியா ஒன் போயிங் பி 747 ரகத்திற்கு மாற்றாக இந்த பி -777 விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் உட்புற வடிவமைப்பும், நிறமும் போயிங் நிறுவனத்தால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் ஒப்புதலின் படி விமானத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.