டெல்லி: விஷ்வபிரதான் கமெர்சியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்துடன் போடப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பாக என்டிடிவி (NDTV) தனது பங்குதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என அதன் பங்குதாரர்களில் ஒருவரான குவாண்டம் செக்யூரிடீஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (Sebi) 2017ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தது.
இது தொடர்பான விசாரணையில், 2009ஆம் ஆண்டு விசிபிஎல் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிடிவி விளம்பரதாரர்கள் 350 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதேபோல வாரண்டுகளை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங்காக மாற்றுவதன் மூலம் என்டிடிவியின் 30 விழுக்காடு பங்குகளை விசிபிஎல் மறைமுகமாக வாங்க என்டிடிவி அனுமதித்தது தெரியவந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் செபி வெளியிட்டுள்ள 37 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், குறிப்பிட்ட நிறுவனம் அதன் பங்கு தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய கட்டுப்பாடு குறித்து 2015ஆம் ஆண்டு முதல் என்டிடிவி நிறுவனத்துக்கு தெரியும் நிலையில், அதன்படி பங்குதாரர்களுக்கு தெரிவிக்க தவறியதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விதிமுறையை மீறி செயல்பட்டதாக என்டிடிவிக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பல்வேறு பாதுகாப்பு நியமனங்களை மீறியதாக என்டிடிவி விளம்பரதாரர்களுக்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏர்ஏசியா இந்தியாவின் பெருமளவு பங்குகளை கைவசப்படுத்தும் டாடா!