டெல்லி: அரபிக் கடலில் பறந்து சென்றபோது விபத்துக்குள்ளான மிக் 29 ரக கடற்படை விமானத்தில் பயணம் செய்த மற்றொரு விமானியை தேடும் பணி 40 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த ‘மிக் 29 கே’ ரக ஜெட் விமானம் வழக்கமான பயிற்சிக்காக இரண்டு விமானிகளுடன் நேற்று முன் தினம் (நவ.26) பிற்பகல் அரபிக் கடலின் வான் பகுதியில் பறந்து சென்றது. அப்போது திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த கடற்படையினர், உடனடியாக போர் விமானங்களில் அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தில் பயணம் செய்த ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். காணாமல் போன மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக என, இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் நேற்று(நவ.27) அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். மாயமான விமானி கமாண்டர் நிஷாந்த் சிங்கை, வான்வெளி, தரைவழி வாயிலாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து, மிக்-29 கே ரக பயிற்சி விமானம் இரு விமானிகளுடன் புறப்பட்டு சென்று, நேற்று முன் தினம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.