உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது உறவுக்காரப் பெண்ணை இளைஞர்கள் சிலர் தொடர்ந்து கேலி செய்துவருவதாகச் சில நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தனது மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விக்ரம் ஜோஷியை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம் ஜோஷி மூளையில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், விக்ரம் ஜோஷி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள. இதில், ஒன்பது இளைஞர்கள் விக்ரம் ஜோஷியை தடுத்து நிறுத்துவதும், தனது தந்தை தாக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் பயந்து ஓடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்பது இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, ஜோஷியின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.