மத்தியப் பிரதேச மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் பரீட்சயமான முகமாகத் திகழ்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா.
இவர் காங்கிரசில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து நேற்று விலகினார். இவருடன் சேர்ந்து ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியை விட்டு விலகினர்.
இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் இரு இலக்க எண்களாகக் குறையும். இந்த நிலையில் சிந்தியா, பாஜகவில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இன்று (மார்ச் 11) மதியம் 12.30 மணிக்கு ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயர் ரக சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாநில முதலமைச்சர் கமல்நாத், 'கவலைப்பட ஒன்றுமில்லை, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவறினால் காங்கிரஸ் ஆட்சிக் கவிழும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் மட்டுமே நிறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதில் பிரச்னை இல்லை, எங்கள் இலக்கு மாநிலங்களவைத் தேர்தல்'- சிவராஜ் சிங் சௌகான்