பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழ்நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெலாகவி, கலாபுர்கி பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதியான தகவலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் வகுப்பு வசதிகளைப் பெறமுடியாத மாணவர்களுக்காக 'வித்யாகாமா திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படியே கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகளைப் பெறமுடியாத சமூகத்தைச் சேர்ந்த பின்தங்கிய 42 லட்சம் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியின் வளாகத்தில் மரத்தடியில், பள்ளி வளாகத்தில் கல்வி கற்கலாம் என அரசு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் எனக் கூறியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநிலங்களில் கரோனா பாதிப்பின் அளவைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த முடிவுகளை அந்த அந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழல்வாத காங்கிரஸ் அரசுகளை அதிரவைத்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன் - நட்டா