இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால், பிச்சைக்காரர்கள், சாலையில் வசிப்பவர்கள், உணவகங்களின் உணவை மட்டுமே நம்பியிருந்த பலர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் ஜான் என்பவரின் குடும்பம், தினமும் 300-க்கும் மேற்பட்டோரின் பசியைப் போக்கிவருகிறது. ஜானின் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பமாகும் இருப்பினும், உணவில்லாமல் பசியோடு யாரும் இருக்கக்கூடாது என நினைத்துள்ளனர். தங்களால் முடிந்தளவு ஏழைகளின் பசியைத் தீர்க்க அவர்கள் தீர்மானித்தனர்.
இதனையடுத்து முதல்கட்டமாக 50 பேருக்கு உணவு தயாரித்து அவர்கள் வழங்கியுள்ளனர். ஆனால், அதிகப்படியானோர் உணவை வாங்க குவிந்ததால் பலரும் உணவு இல்லாமல் திரும்பியுள்ளனர். இதனால் மனம் வாடிய ஜான் குடும்பத்தினர் இன்னும் கூடுதலாகப் பணம் செலவழித்து தற்போது தினமும் 300 பேருக்கும் மேற்பட்டோரின் பசியைப் போக்கிவருகின்றனர்.
இது குறித்து ஜான் கூறுகையில், ”மக்களுக்குச் சேவைசெய்ய கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். எங்களுக்கு இருக்கும் வசதிக்கு எத்தனை பேருக்கு உணவு வழங்க முடியுமோ, அத்தனைப் பேருக்கும் முடிந்தளவு உணவு வழங்கிவருகிறோம். பசியின் கொடுமை என்னவென்று எங்களுக்குத் தெரியும். இதன் காரணமாகத்தான் பலருக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம்” என்றார்.
ஜான் குடும்பத்தின் இந்தச் செயலை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவாவில் உணவில்லாமல் தவிக்கும் மக்கள் - மீட்கக்கோரி ஆட்சியரிடம் கோரிக்கை