டெல்லி : மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் கூடுதல் நீதிபதி பரிந்துரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கணேடிவாலா. இவர் அண்மையில், பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகள், பெண்களை காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை விசாரித்தார்.
அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் தண்டனையை பாதியாக குறைந்தார். மேலும் சிறுமியின் மார்பை ஆடையுடன் தொடுவது ஒன்றும் குற்றமல்ல.
ஆடையில்லாமல் தொடுவதுதான் குற்றம் எனவும் கூறினார். இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், சிறுவர், சிறுமியரின் பேண்ட் ஜிப்பை கழற்றுவது குற்றமாகாது. அது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வராது என்றும் மற்றொரு வழக்கில் கூறினார்.
இந்த இரு தீர்ப்புகளும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு, நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்ப பெற்றுள்ளது. முன்னதாக நீதிபதி புஷ்பா கணேடிவாலா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிறுமி பாலியல் வன்முறை: மும்பை உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!