ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இதனை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நீக்கியது.
இதனை எதிர்த்து தனிநபர்கள், அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், தன்னார்வ அமைப்பு, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் என பல்வேறு நபர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே. கௌல், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்பு, இதுதொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முறையிட்டிருந்தது.
அதில் 1959 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று (மார்ச்2) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த கால தீர்ப்புகளில் எந்த முரண்பாடும் இல்லையென்றுக் கூறி மனுதார்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறினர். இதனை நீதிபதிகள் கடந்த நவம்பரில் நிராகரித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கைத் தேவை - பாஜக