மத்தியப் பிரதேசத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரோனா தொற்று காரணமாக பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.
இதற்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பாஜக மூத்த தலைவரும் குவாலியர் வேட்பாளருமான பிரத்யும் சிங் தோமர் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் ஆணையம், அரசு ஆகியவற்றின் உத்தரவுக்கு எதிராக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கார், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட குழு இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். சட்டவிரோதமாக ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.