அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தரவுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியான சபரிமலை தீர்ப்பும், ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிரகாஷ் காரத், "நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்காமல், மத நம்பிக்கையின்பால் உச்ச நீதிமன்றம் இயங்குகிறது. அரசுக்கு அடங்கி நீதித்துறை இயங்குவது இதன் மூலம் தெளிவாகிறது.
ஒரு சமூக மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் விதமாகவும் மதச்சார்பற்ற கொள்கையை மறுக்கும் விதமாகவும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றப்பட்டிருப்பது பெண்களின் உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த வழக்கின் வாதத்தை உச்ச நீதிமன்றம் மெதுவாக நடத்துவது நீதி ஏய்ப்புக்கு சமமாகும்.
பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றார்போலும் சிறுபான்மையினர் நலத்தை புறக்கணிக்கும் விதமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுவதற்கான அனைத்து அம்சங்களும் தீர்ப்பில் உள்ளது. எதிர்காலத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை!