பாட்னா: சமுதாயத்தில் பாகுபாடு, தீண்டாமை இருக்கும்வரை மக்களவை, மாநில சட்டப்பேரவை, அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என சுஷில்குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான சுஷில்குமார் மோடி, எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டை 2030 ஜனவரி 25 வரை நீட்டிப்பு செய்ததற்காக மத்திய அரசைப் பாராட்டினார்.
மேலும் அவர், "சமுதாயத்தில் பாகுபாடு, தீண்டாமை நிலவும்வரை மக்களவை, மாநில சட்டப்பேரவை, அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு தொடர வேண்டும்" என வலியுறுத்தினார். பிகார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 38 இடங்கள் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு திருத்த மசோதா மூலம் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் விதிகளை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பைக் கட்டமைத்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை காங்கிரஸ் புறக்கணித்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், மோடி அரசு அம்பேத்கரை கவுரவிக்கும்வகையில் ஐந்து இடங்களில் 'பஞ்ச்தீர்த்' அமைத்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிகாரில் உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி, எஸ்.டி, பிரிவுகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 17 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்ததையும் அவர் குறிப்பிட்டார்.