டெல்லி: வாட்ஸ்- அப் நிறுவனம் அமல்படுத்திய தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்ஏ போப்டே தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதிவழங்கியுள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில், பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வடிவமைக்க உத்தரவிடக் கோரப்பட்டது.
வழக்கறிஞர் விவேக் நாராயணன் மூலம் வர்த்தகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த அந்த வழக்கில், வாட்ஸ்- அப் நிறுவனம் தான் அறிமுகப்படுத்திய தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லையெனில் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு மேல் தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியாது என கட்டாயப்படுத்தியதையும் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, தனியுரிமை கொள்கை சர்ச்சைக்குள்ளானபோது, தனியுரிமைக் கொள்கையை ஏற்காதவர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி நீக்கப்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
மத்திய அரசு இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தவறிவிட்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார், மேலும், இதேபோன்ற தனியுரிமை கொள்கையை முன்மொழிந்ததற்காக வாட்ஸ்- அப் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 110 மில்லியன் யூரோக்களை அபாரதம் விதித்ததையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையும் படிங்க: வாட்ஸ் அப் கெடுபிடி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறும் பயனர்கள்!