தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. சட்டமன்றத்தில் தற்போது அதிமுக - 114, திமுக - 88, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, சபாநாயகர் - 1, சுயேட்சை (தினகரன்) - 1 என 213 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம், அவர்களின் மறைவு என 21 இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்நிலையில், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை நடத்தபோவதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டிருப்பதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை என தெரிவித்திருக்கிறார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு.
ஆனால், வழக்குகள் இருந்தாலும் தேர்தலை நடத்த தடை எதுவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என சொல்லி, குறிப்பிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வலியுறுத்தி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுத்துள்ளது தி.மு.க. இதில் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை திமுக அணுகியது.
இது இன்று உச்சநீதி மன்றத்தில் விவாததுக்கு வந்தபோது, அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை விளக்குமாறு திமுகவுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.