கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட நிலையில், பொருளாதார சூழல் காரணமாக பல குழந்தைகளை அவர்களது குடும்பத்தினர் காப்பகத்தில் சேர்த்தனர். அதன் தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, குழந்தைகள் மீண்டும் அவர்களுது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அந்த குழந்தைகளின் கல்விக்காக மாநில அரசு மாதம் 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் ஆன்லைன் கல்வியை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரையில் தேவையான வசதிகளை செய்து தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ், ஹேமந்த் குப்சா, அஜய் ரஸ்டோகி ஆகியோர் கொண்ட அமர்வு, காப்பகத்தில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று தொடங்கியபோது, காப்பகத்தில் 2,27,518 குழந்தைகள் இருந்ததாகவும் அதன் பின்னர், 1,45,788 குழந்தைகள் அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. குடும்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவிட் - 19 சூழலின்போது, காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் நிலையை அறிந்து கொள்வதற்கு இதுகுறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.