கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இருப்பிடம், உணவு மற்றும் பல அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம். ஆர். ஷா கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே விதமான பயணச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிதியுதவி வழங்கவும், ஊரடங்குக்குப் பிறகான காலத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் திட்டம் கொண்டுவர வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
பேருந்து, ரயில் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ளும் வெளிமாநில தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை போதுமான எண்ணிக்கையில் ரயில்களை இயக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில், பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது உணவு, தண்ணீர் ஆகியவற்றை அந்தந்த மாநில அரசே வழங்க வேண்டும், பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறதா என்பதை மாநில அரசு உறுதி செய்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நடந்தே செல்லும் தொழிலாளர்களுக்கு உடனடியாக இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.