கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி, மார்ச் 28ஆம் தேதி, 'பி.எம்., கேர்ஸ் பண்டு' எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம், கரோனா போன்ற பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி வழங்கவும் இந்த நிதியம் அமைக்கப்பட்டது. இதற்கு சிறு குழந்தைகள் முதற்கொண்டு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் நன்கொடை அளித்தனர்.
இதையடுத்து இந்த பிரதமர் நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரி சிபிஐஎல் எனும் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு முரணாக பிஎம் கேர்ஸ் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று (ஆக. 18) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பிரதமர் நிவாரண நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு உத்தரவிட மறுத்த உச்ச நிதிமன்ற நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதுமட்டுமின்றி, பிரதமர் நிவாரண நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவது பொருத்தமானது என்று தோன்றினால் அரசு மாற்றலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்-உயர் நீதிமன்றம்