குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல நோயாளிகள் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உத்தரவு
அப்போது, ” கரோனா மருத்துவமனைகளில் தீ விபத்துகளைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் மருத்துவமனையின் பாதுகாப்பினை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அனைத்து கரோனா மருத்துவமனைகளும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
நான்கு வாரங்களுக்குள்ளாக அனைத்து மருத்துவமனைகளும் தடையில்லா சான்றிதழ்களைப் பெறவேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் மருத்துவமனைகளை மாதந்தோறும் ஆய்வு செய்து, மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் ” என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனை தீ விபத்து : குஜராத் அரசுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்!