சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதில் ஆளும் இடதுசாரி அரசு முனைப்புக் காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவின் ஒரு சில பகுதிகளில் பாஜக, வலதுசாரி அமைப்புகள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்தாண்டு தொடக்கத்தில் 56 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறுஆய்வு மனுக்கள் தொடர்பான வழக்கை ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கைவிரித்தார். பின்னர், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, "இது உணர்வுப்பூர்வமான விவகாரம். பிரச்னை வெடிக்கும் சூழ்நிலை உருவாக விரும்பவில்லை. ஏற்கனவே, வழக்கு ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதால் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது. கோயிலுக்குச் செல்ல பெண்களுக்கு தடையில்லை. உண்மையாக இருந்தாலும், இது இறுதி தீர்ப்பல்ல" எனத் தெரிவித்தது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு!