கரோனா அச்சுறுத்தல் காரணமாக குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுவரக் கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அதிக விமானங்களை இயக்குவதன் மூலம் குவைத் மற்றும் பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை தாயகம் அழைத்து வர உத்தரவிடவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மற்றும் தொற்றுநோய்களின் அச்சுறுத்தலால் நாடு திரும்ப காத்திருக்கும் மக்களின் முழுமையான பட்டியலை மத்திய அரசு இன்னும் முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என்று கூறியது.
குவைத் மற்றும் பிற வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.