இந்திய வரலாற்றின் கறுப்புப் பக்கம் என்று கூறப்படுகிற குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு குஜராத் அரசு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவருக்கு வீடு மற்றும் பணி வழங்க வேண்டும் என குஜராத் அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு வார்த்தைகளில் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புக்கொண்டபடி, முறையான தரமான தங்குமிடத்தை வழங்காமல் வெறும் 50 சதுர மீட்டர் நிலத்தையும், ஒப்பந்த அடிப்படையில் ஒரு பியூன் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் அரசு மீறியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென என அவர் நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான ஷோபா குப்தா, பில்கிஸ் பானோவின் நிலை குறித்து விளக்கினார்.
வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன் சுதந்திரமாகப் பிரதிநிதித்துவம் செய்யலாம். அதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.