இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் 3 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க ஆணையிட்டது. ஈஎம்ஐ விலக்கு மே மாதத்தில் நிறைவு பெற்றவுடன், கடன் வாங்கியவர்கள் இன்னும் இது நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் '2020 ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, தகுதி வாய்ந்த கடன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அணுகியுள்ளதாக எஸ்பிஐ வங்கி’ நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்காக, 'கிட்டத்தட்ட 8.5 மில்லியன் தகுதி வாய்ந்த கடன் பெறுபவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம், ஈஎம்ஐ-களை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான செயல்முறையை எஸ்பிஐ எளிமைப்படுத்தியுள்ளது. எஸ்.எம்.எஸ் பெற்ற ஐந்து நாட்களுக்குள் வங்கி அனுப்பிய குறுந்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நியமிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு (வி.எம்.என்) கடன் வாங்கியவர்கள் ஈஎம்ஐ-களை ஒத்திவைக்க விரும்பினால், ஆம் என்று பதிலளிக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் மே 22ஆம் தேதி, 'தங்களது வங்கிகளில் கடன் வாங்கியவர்களில் சுமார் 20% பேர், ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் வரைக் குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!