கரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், இதற்கான மருந்தை கண்டுபிடிக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர். மருந்து ஏற்படுத்தும் பின் விளைவுகளை அறிந்து கொள்வதற்கு, விலங்குகளின் மீது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சில விஞ்ஞானிகள், தங்கள் உயிரினை துச்சமென மதித்து அவர்களையே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களை அறிந்து கொள்வோம்.
மஞ்சள் காய்ச்சலுக்கு உயிரை தியாகம் செய்தவர்
1881ஆம் ஆண்டு, மஞ்சள் காய்ச்சலுக்கு காரணம் கொசுக்கள் கடிப்பதுதான் என மருத்துவர் கார்லஸ் கண்டுபிடித்தார். இதனை உறுதிபடுத்திக் கொள்தவற்காக அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கு தங்களை த் தாங்களே உட்படுத்திக் கொண்டனர். 1900களில், விஞ்ஞானி வால்டர் ரீட் தலைமையில் ஜேம்ஸ் கரோல், அரிஸ்டைட்ஸ் அக்ரமோன்டி, ஜேஸ்ஸி வில்லியம் லேசர் ஆகிய மருத்துவர்கள் மஞ்சள் காய்ச்சல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இறுதியாக, கரோல், லேசர் ஆகிய மருத்துவர்கள் தங்கள் மீது கொசுக்களை கடிக்க வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் இருவரும் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சில நாள்களிலேயே, லேசர் உயிரிழந்தார். கரோல் குணமடைந்தார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதே நோயால் அவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற அவர்கள் தங்களது உயிரினை தியாகம் செய்தனர்.
தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்
அக்காலத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து கொடுத்து முழு உடலையும் செயலிழக்க செய்வர். முழு உடலையும் செயலிழக்க வைப்பது தேவையில்லாத ஒன்று என சிறந்த மருத்துவர் ஒருவர் நிரூபணம் செய்தார். ஆம், அமெரிக்கா பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஓ நீல் கேன் என்ற மருத்துவர் அறுவை சிகிச்சையின் செயல்முறைகளை சீர்திருத்த விரும்பினார். நோய் பாதிக்கப்பட்ட விரல்களை மட்டும் செயலிழக்க செய்துவிட்டு தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 1921ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி மயக்க மருந்து கொடுத்து வயிற்றை செயலிழக்க வைத்து குடல் வாலை தானே நீக்கிக் கொண்டார். அப்போது அவருக்கு 60 வயது. பத்து ஆண்டுகள் கழித்து, தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டு 36 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள முழு உடலையும் செயலிழக்க வைக்க தேவையில்லை என இவர் உலகை நம்பவைத்தார்.
வயதானவர்களை இளையவராக மாற்ற ஒரு முயற்சி
விஞ்ஞானி, அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் அலெக்சாண்டர் போக்டனோவ் என்ற ரஷ்ய மருத்துவர். ரத்த மாற்று மேற்கொண்டு வயதானவர்களை இளையவராக மாற்றலாம் என்ற வேடிக்கையான யோசனை அவரிடமிருந்தது. 1924ஆம் ஆண்டு, இதனை நிரூபணம் செய்ய தன்னைத் தானே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். ஆனால், அவர் உயிரிழந்தார். ரத்தத்தை கொடுத்தவருக்கு மலேரியா, காச நோய் இருந்தது பின்னர் தெரியவந்தது.
பாக்டீரியாவை உட்கொண்ட விஞ்ஞானி
விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவாலேயே காலரா நோய் ஏற்படுகிறது என ஜெர்மன் விஞ்ஞானி ராபர்ட் கோச் கண்டுபிடித்தார். மேக்ஸ் ஜோசப் வோன் பீட்டேன்கோபர் என்ற வேதியியல் விஞ்ஞானி ராபர்ட் கோச்சின் முடிவை தவறு என நிரூபணம் செய்ய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கோச்சின் முன்பே விப்ரியோ காலரே பாக்டீரியாவை பழச்சாற்றில் கலந்து மேக்ஸ் ஜோசப் குடித்தார். காலரா அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வார சிகிச்சைக்கு பின்பு குணமடைந்தார்.
புற்றுநோயை கண்டறிய ஒரு முயற்சி
பேரி மார்ஷல் என்ற ஆஸ்திரேலியா மருத்துவர் ராயல் பெர்த் மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். 1984ஆம் ஆண்டு, வயிற்றுப்புண், புற்று நோய் ஆகியவைக்கு காரணம் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாதான் என மருத்துமனையில் சக மருத்துவராக பணியாற்றிவந்த ராபின் வாரனுடன் சேர்ந்து மார்ஷல் அறிவித்தார். இதனை மற்ற விஞ்ஞானிகள் மறுத்தனர். ஏனெனில், வயிற்றில் வெளியாகும் ரசாயனம் பாக்டீரியாவை கொன்றுவிடும் என அவர்கள் நம்பினர். இது தொடர்பான பாக்டீரியாவை பழச்சாறுடன் மார்ஷல் உட்கொண்டார். சில நாள்களிலேயே, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. வயிற்றில் இருந்த பாக்டீரியாவால் புண்கள் தோன்றின என மருத்துவ முடிவுகளில் தெரியவந்தன. ஆன்டி பாக்டீரியல் மருந்தை உட்கொண்டதன் மூலம் பேரி குணமடைந்தார். புண்களுக்கும் புற்று நோய்க்கும் காரணம் வயற்றில் இருக்கும் பாக்டீரியாக்களே என இதன் மூலம் தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்புக்காக பேரி, வாரன் ஆகியோருக்கு 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: எதிரியாக மாறிய கைகள்