ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள தன்லா கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர், பிரமோத்கன்வர். இவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அக்கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பீடு பெறும் வகையில் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த முகாமில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 275 பெண்களுக்கு பிரமோத்கன்வர், தனது சொந்த செலவில் காப்பீடு எடுத்துக்கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் பிரமோத்கன்வரிடம் கேட்டபோது, ’பொதுவாக கிராமத்திலிருக்கும் பெண்களுக்கு இது போன்ற திட்டங்கள் குறித்து தகவல்கள் தெரிவதில்லை.
அவர்களுக்கு இத்திட்டங்களைக் கொண்டு செல்ல முடிவு செய்தேன். இந்த முகாம் மூலம் 275 பெண்கள் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைவார்கள். அவர்களுக்கு எனது சொந்த செலவில் காப்பீட்டு தொகையைக் கூட செலுத்திவிட்டேன்’என்றார்.
இதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல ஊராட்சி மன்றம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வெட்ட வெட்ட துளிர்க்கும் கடன் செயலிகளை கட்டுப்படுத்துமா அரசு?